இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக 3 சிறிலங்கா கடற்படையினர் கைது?
திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் அமைந்திருந்த இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினர், நேற்றுமுன்தினம் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இருந்த இரகசியத் தடுப்பு முகாம் பற்றிய தகவலை வெளிக் கொண்டு வந்ததை அடுத்தே, இந்த கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தன்னை அடையாளம் காட்ட விரும்பாத சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு, கடற்படை ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பற்றிய விபரங்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார்.

சிறிலங்காவில் நீதி மற்றும் அமைதிக்கான திட்டம் , கடந்த ஜுன் மாதம் வெளியிட்ட இரகசிய தடுப்பு முகாமின் செய்மதிப் படம்
இதற்கிடையே, சிறிலங்காவில் நீதி மற்றும் அமைதிக்கான திட்டம் என்ற மனித உரிமை அமைப்பினால், கடந்த ஜுன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், கோத்தா முகாம் என்று அழைக்கப்பட்ட இந்த சித்தரவதை முகாமுக்கு 20190ஆம் ஆண்டு வரை லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதர பொறுப்பாக இருந்தார் என்றும், அதற்குப் பின்னர், லெப்.கொமாண்டர் ரணசிங்க முகாம் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.