மேலும்

ஏப்ரலில் எண்ணெய் இறக்குமதிக்கு 886 மில்லியன் டொலர் செலவு

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு ஏப்ரல் மாதம், 886 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக,  சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் எண்ணெய் இறக்குமதிச் செலவு, 630.1 மில்லியன் டொலராக இருந்த நிலையில்,  ஏப்ரல் மாதத்தில் 150% அதிகரித்துள்ளது.

இது 2026 ஆம் ஆண்டில், இதுவரையிலான மிக உயர்ந்த எரிபொருள் செலவாகும்.

மத்திய கிழக்கு மோதலால் தூண்டப்பட்ட உலகளாவிய ரீதியாக அதிகரித்துள்ள எண்ணெய் விலைகள் மற்றும் அதிகரித்த இறக்குமதி அளவுகளே இதற்குக் காரணம்.

2,457 மில்லியன் டொலர் மதிப்பிலான மொத்த மாதாந்த இறக்குமதிச் செலவில், ஏப்ரல் மாத எரிபொருள் இறக்குமதிச் செலவு மட்டும், 36% ஆகும்.

ஏப்ரல் மாதத்தில்,  108.1 மில்லியன் டொலர் மதிப்பிலான மசகு எண்ணெய், 734.6 மில்லியன் டொலர் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் மற்றும் 43.4 மில்லியன் டொலர் மதிப்பிலான நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்தது.

இதனால், முதல் நான்கு மாதங்களுக்கான எரிபொருள் இறக்குமதிச் செலவு, 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில்  ஏற்பட்ட எண்ணெய் இறக்குமதிச் செலவான, 1.41 பில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 53.6% அதிகரித்து 2.16 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றும் சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *