கொழும்புத் துறைமுகத்தில் ஐஓஎஸ் சாகர்
ஐஓஎஸ் சாகர் என்ற பெயரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள, இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா, இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை அடைந்துள்ளது.
இது, இந்தப் பணியின் இரண்டாவது கட்டத்தில், அதன் ஏழாவது துறைமுகப் பயணமாகும். இது கடலில் மேற்கொள்ளப்படும் ஒரு தனித்துவமான அனைத்துலக முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது.
ஐஓஎஸ் சாகர் கப்பலில், பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைதீவுகள், மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், சிங்கப்பூர், சீசெல்ஸ், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, தன்சானியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் உள்ளனர்.
கொழும்புத் துறைமுகத்திற்குச் சென்று ஓஎஸ் சாகர் கப்பலை வரவேற்ற சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரியான றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, ஐஓஎஸ் சாகர் ஒரு சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை உறுதி செய்வதில் பகிரப்பட்ட பொறுப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் சிக்கலான சவால்களை எந்தவொரு நாடும் தனியாக எதிர்கொள்ள முடியாது, நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் கூட்டுப் பாதுகாப்பு அவசியம் என்றும், றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படைத் தளங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த துறைமுகப் பயிற்சியைத் தொடர்ந்து, ஐஓஎஸ் சாகர் ஏப்ரல் 2ஆம் நாள், மும்பையிலிருந்து தனது கடல் பயணக் கட்டத்தைத் தொடங்கியது.
இந்தப் பயிற்சியில், 16 நாடுகளைச் சேர்ந்த 38 அதிகாரிகளும், மாலுமிகளும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
கப்பல் ஓட்டுதல், வழிசெலுத்தல், தகவல் தொடர்பு நடைமுறைகள், கடலில் உயிர் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாடு ஆகிய பயிற்சிகளை இது உள்ளடக்கியது.
கொழும்பில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா கடற்படையின் அதிகாரிகளுடனான சந்திப்புகள், சிறிலங்கா கடற்படையினருடன் தொழில்முறை மற்றும் விளையாட்டு ரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதுடன், நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுக்கும் செல்லவுள்ளனர்.
பிராந்தியப் பாதுகாப்பிற்காகக் கடல்சார் கூட்டாளிகளிடையே ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், “ஒரே பெருங்கடல், ஒரே பணி” என்ற தொலைநோக்குப் பார்வையை ஐ.ஓ.எஸ். சாகர் முன்முயற்சி பிரதிபலிக்கிறது.

