12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை சிறிலங்காவுக்கு வழங்கியது அவுஸ்ரேலியா
சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை கொடையாக வழங்கியுள்ளது.
மிரிஸ்ஸவில் உள்ள சிறிலங்கா கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது, அவுஸ்ரேலிய ‘ஆட்சி இறையாண்மை எல்லைகள்’ தளபதியும், கடல் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் (Brett Sonter) சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் 12 கண்காணிப்பு ட்ரோன்களையும் முறைப்படி கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் மற்றும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு கடல்சார் எல்லை முகாமைத்துவத்தில் அவுஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அவுஸ்ரேலிய எல்லைப் படைக்கும் சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மை, கூட்டு முயற்சிகள் மற்றும் பங்களிப்புகள் மூலம் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், இது பாதுகாப்பான மற்றும் பத்திரமான கடல்சார் சூழல்களைப் பேணுவதில் இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கும் அவுஸ்ரேலிய எல்லைப் படைக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

