மேலும்

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் 7,672 மில்லியன் ரூபா நட்டம்

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால்  7,672 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது.

900 மெகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்ட நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்காக 8 கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரமற்றவை என ஆய்வக பரிசோதனை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில்,  சிறிலங்கா மின்சார சபை நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மின்சார சபைக்கு ஏற்படக்கூடிய மதிப்பிடப்பட்ட நேரடி நட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதலாம் கப்பலில் இருந்து 595.1 மில்லியன் ரூபாவும், இரண்டாவது கப்பலில் இருந்து 288.5 மில்லியன் ரூபாவும், மூன்றாவது கப்பலில் இருந்து  ஆயிரத்து 047.4 மில்லியன் ரூபாவும், நான்காவது கப்பலில் இருந்து 865 மில்லியன் ரூபாவும் நேரடி நட்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஐந்தாவது கப்பலில் இருந்து  ஆயிரத்து144.2 மில்லியன் ரூபாவும், ஆறாவது கப்பலில் இருந்து ஆயிரத்து 197.7 மில்லியன் ரூபாவும், ஏழாவது கப்பலில் இருந்து 974.9 மில்லியன் ரூபாவும், எட்டாவது கப்பலில் இருந்து ஆயிரத்து 559.3 மில்லியன் ரூபாவும் நேரடி நட்டம் ஏற்படும் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரி மூலம் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தியினால் மின்சார சபைக்கு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ள நேரடி நட்டம் 7,600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

இதனிடையே, அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 9ஆவது கப்பலின் நிலக்கரியும் தரமற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *