பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் அனுர சந்திப்பு
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, குறிப்பாக தொழில்நுட்பம், டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
சிறிலங்காவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
அதேவேளை, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே, அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமட் பின் சயீத் அல் நஹ்யான், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோருடனும் சிறிலங்கா அதிபர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.


