அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்
அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோஹ்லர் (Steve “Web” Koehler),3 நாள்கள் அதிகாரப்பூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ளார்.
இன்று கொழும்பு வந்த அவர், எதிர்வரும் 21ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறுதித்தன்மையில் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இயங்குநிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து சிறிலங்கா அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன், பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அட்மிரல் கோஹ்லரின் சிறிலங்காவுக்கான இரண்டாவது பயணமாகும்.
இந்தப் பயணம், உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களில் சிறிலங்காவின் இருப்பிடத்துக்கு அமெரிக்கா அளிக்கும் மூலோபாய முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பயணம் அமெரிக்காவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்சார் கள விழிப்புணர்வு, நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மற்றும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதில் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கலந்துரையாடல்களின் போது, கவனம் செலுத்தப்படும் என்றும் அமெரிக்க தூதரக அறிக்கை கூறுகிறது.
