இந்தியா நீட்டும் நிதியுதவி
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பெப்ரவரி 1ஆம் நாள் சமர்ப்பித்த இந்திய அரசாங்கத்தின் 2026 -27 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், உள்நாட்டில் மக்களின் வரவேற்புக்குரிய ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
ஆனால், சிறிலங்காவை பொறுத்தவரையில் இந்த வரவுசெலவுத் திட்டம் வரவேற்புக்குரியதொன்றாக உள்ளது. ஏனென்றால், இந்த வரவுசெலவு திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாக, சிறிலங்காவுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில், சிறிலங்காவுக்கு சுமார் 3 பில்லியன் இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 4 பில்லியன் இந்திய ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த முறையை விட 33 சதவீதம் அதிகம்.
கடந்த 10 ஆண்டுகளில், இந்திய வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக, சிறிலங்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச நிதியுதவி இதுவாகும்.
ஆண்டுதோறும் இந்தியா, வெளிவிவகார அமைச்சின் ஊடாக, பல்வேறு நட்பு நாடுகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிதி அந்த நாடுகளில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
இந்தியா தனது பிராந்திய மற்றும் சர்வதேச அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த நிதியை செலவிடுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடாகவே இந்த நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு 221.19 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 4 பில்லியன் ரூபா சிறிலங்காவுக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.
2017 -18 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் 1.25 பில்லியன் ரூபாவும், 2018- 19 வரவுசெலவுத் திட்டத்தில் 1.50 பில்லியன் ரூபாவும், 2019- 20 வரவுசெலவுத் திட்டத்தில் 2.5 பில்லியன் ரூபாவும், சிறிலங்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன் பின்னர் 2020-21 தொடக்கம் 2022-23 வரையான மூன்று ஆண்டுகளும், தலா 2 பில்லியன் ரூபாவை இந்தியா ஒதுக்கியது.
2023 -24 ஆம் ஆண்டு இந்த தொகை 1.5 பில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு சிறிலங்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, இந்தியா 4 பில்லியன் டொலர்களை சிறிலங்காவுக்கு உதவியாக வழங்கியது.
அதன் தொடர்ச்சியாகவே, 2023 -24 இல், சிறிலங்காக்கான நிதி ஒதுக்கீடு 0.5 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டது.
எனினும் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான மீட்புக் காலகட்டத்தில், 2024- 25 காலப்பகுதியில் 3.17 பில்லியன் ரூபாவை வழங்கிய இந்தியா, 2025-26 காலப் பகுதிக்கு 2.45 பில்லியன் ரூபாவை உதவியாக அறிவித்த போதும், பின்னர் 3 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது.
இப்போது அதில் இருந்து 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 4 பில்லியன் ரூபா நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை அயல் நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையிலானது என்று இந்திய அரசாங்கம் கூறியிருக்கிறது.
அதேவேளை, நேபாளத்துக்கான நிதி ஒதுக்கீடு சிறிலங்காவை போலவே, ஒரு பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டுக்கு 8 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
மாலைதீவுக்கான நிதியொதுக்கீடு 0.5 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்படுகிறது. அதேபோல, பங்களாதேசுக்கான நிதி பாதியாக குறைக்கப்பட்டு – வெறும், 0.6 பில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்த ஆரம்பித்துள்ள சூழலில், கடந்த ஆண்டு ஒதுக்கிய ஒரு பில்லியன் ரூபாவை இம்முறை 1.5 பில்லியன் ரூபாவாக உயர்த்தியிருக்கிறது.
இந்த நிதி ஒதுக்கீடுகள் இந்தியாவுடன் ஒத்துழைக்கின்ற நாடுகளுக்கு அதிக நிதி உதவிகளை வழங்குவதற்கு அது தயாராக இருக்கிறது என்பது வெளிப்படையாகியுள்ளது.
இந்தியா, சிறிலங்கா, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அவ்வாறான நிலையில் உள்ளன.
அதேவேளை இந்தியாவுடன் முரண் போக்கை கடைப்பிடிக்கின்ற பங்களாதேஷ் மற்றும் மியான்மாருக்கு நிதியுதவிகளை குறைத்திருக்கிறது.
சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அண்மைய பேரிடருக்கு பின்னர் இந்தியா 450 மில்லியன் டொலர் உதவிப்பொதியை அறிவித்தது. அதில் 100 மில்லியன் டொலர் கொடையாக வழங்கப்படும் என இந்தியா கூறியுள்ளது.
இந்த இந்த நிதியுதவி திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படவுள்ளது என்பது தொடர்பாக இன்னமும் தெளிவான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்தியா இதனை ஒரு தலைப்பட்சமாக ஏற்கனவே செயற்படுத்த ஆரம்பித்து விட்டது.
பேரிடர் நிகழ்ந்தவுடன் இந்தியா அவசரமாக விமானங்கள் மூலம், பெய்லி பாலங்களை அனுப்பி வைத்தது. அவற்றை பொருத்துவதற்கு இந்திய இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 45 படையினரையும், சிறிலங்காவுக்கு அனுப்பியது.
அது ஒரு தந்திரோபாய நடவடிக்கை. பிற நாடுகள் சிறிலங்காயில் பேரிடர் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில், இந்தியா எடுத்த நடவடிக்கை.
இந்தியா 450 மில்லியன் டொலரை உதவியாக அறிவித்த பின்னர், 15 பாலங்களை அமைப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. அந்த 15 பாலங்களை பொருத்துகின்ற பணிகளில் இந்திய இராணுவ அணிகள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த திட்டத்தை இந்தியா பாதுகாப்பு நோக்கிலும் செயற்படுத்துகிறது. இந்திய இராணுவ அணி திருப்பி அழைக்கப்பட்டால் மீண்டும் அனுப்பி வைக்க முடியாது.
ஏற்கனவே வந்த இராணுவ அணியை தொடர்ந்து தங்க வைத்திருக்க முடியும். அதனால் 15 பாலங்களை பொருத்துகின்ற பணியை அதே இராணுவ அணியைக் கொண்டே இந்தியா முன்னெடுக்கின்றது.
விமானம் மூலம் அனுப்பப்பட்ட 5 பாலங்கள் தவிர, எஞ்சிய பத்து பாலங்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து 10 பாலங்களை ஏற்றிய இந்திய கடற்படை கப்பல், கடந்த 31ஆம் திகதி புறப்பட்டது.
இந்தப் பாலங்களை அமைக்கும் திட்டத்தை தனது 450 மில்லியன் உதவித் திட்டத்துக்குள் கொண்டு வந்ததன் மூலமாக, இந்தியா ஒரு தலைப்பட்சமாக அதனை செயற்படுத்த தொடங்கிவிட்டது.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம், இந்தத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு இன்னமும் முழுமையான இணக்கப்பாட்டை வெளியிடவில்லை.
ஏனென்றால், இந்தத் திட்டத்தில் இந்தியா தான் நேரடியாக பங்கு பெற விரும்புகிறது. திட்டத்திற்கான நிதியை முழுமையாக அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு அது தயாராக இல்லை.
இந்திய இராணுவத்தினர் பாலங்களை புனரமைக்கும் பணிகளை இன்றுவரை முன்னெடுப்பதற்கான அடிப்படைக் காரணமும் இதுதான்.
மீளமைப்பு திட்டங்களில் இந்தியா நேரடியாக பங்கேற்பதை விரும்புகின்ற அதேவேளை அதற்கு சிறிலங்கா அரசாங்கம் பெரிதாக விருப்பம் தெரிவிக்கவில்லை.
ஆனாலும், தவிர்க்க முடியாதபடி இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கியிருக்கிறது.
ஒரு பக்கம் சீனாவின் நெருக்கடிகள் இருந்தாலும் இந்தியாவைச் சமாளிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.
ஏனென்றால் அயல்நாட்டுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா பெருமளவில் உதவிகளை வழங்கி வந்திருக்கிறது. அதனை சிறிலங்காவினால் தட்டிக் கழிக்க முடியாது.
அதனை விட்டு விலகிச் செல்ல முனைந்தால் சிறிலங்காவுக்கு ஆபத்து ஏற்படும். எனவே இந்தியாவை எப்படியாவது அரவணைக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
ஆனால் அது அதிகளவில் சுமையாக மாறுவதை அரசாங்கம் தவிர்க்க பார்க்கிறது. அதனால் தான் இந்தியாவுடன் இணைந்து மீள்கட்டமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு அது தயங்குகிறது.
இந்த இழுபறியால் தான் 450 மில்லியன் டொலர் நிதியுதவியை பயன்படுத்துகின்ற திட்டத்தை உருவாக்குவதில், இழுபறிகள் ஏற்பட்டிருக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டேயாக வேண்டும். ஏனென்றால் இந்தியா மட்டும்தான் சிறிலங்காவுக்கு மீளமைப்புக்காக பெருமளவில் நிதியதவியை அறிவித்திருக்கின்ற ஒரே நாடு.
இதனை தட்டிக் கழிக்கவோ நிராகரிக்கவோ முடியாது. சீனா கூட இதுவரையில் வாயை திறக்காமல் இருக்கிறது.
அரசாங்கம் அதனால் தான் அனைத்துலக கொடை வழக்கும் நாடுகளின் கூட்டத்தை கூட அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சிறிலங்காவை மேலும் தன் பிடிக்குள் கொண்டு வருவதற்காகவே, இந்தியா கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
இதன் ஊடாக, சிறிலங்காவை மேலும் வளைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதற்கான சாத்தியங்கள் இல்லையென்றால் பங்களாதேஷை போல நிதி ஒதுக்கீட்டை குறைத்திருக்கும்.
– ஹரிகரன்
வழிமூலம்- வீரகேசரி வாரவெளியீடு (08.02.2026)

