ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை – ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறிலங்கா பேச்சு
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, மீளப் பெறுவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பவுலா பம்பலோனி தலைமையிலான உயர்மட்டக் குழுவினரைச் சந்தித்த போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட சுயாதீன நிறுவனங்களை வலுப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் போன்ற அரசின் சட்ட சீர்திருத்தங்கள் குறித்தும் அமைச்சர் விஜித ஹேரத், ஐரோப்பிய ஒன்றிய குழுவிற்கு எடுத்துக் கூறியுள்ளார்.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான சிறிலங்காவின் முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலகளாவிய அரசியல்-பொருளாதார மாற்றங்கள் மற்றும் பிராந்திய சவால்கள் குறித்தும் இதன்போது, விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

