தமிழ்க் கட்சிகளை ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டு வர சுவிஸ் முயற்சி
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, அனைத்து தமிழ்த்தரப்புக்களையும், ஒருமித்த நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சுவிட்சர்லாந்து ஈடுபட்டுள்ளது.
இதற்கமைய, சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சிறப்பு சந்திப்பு ஒன்று, கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இரா.சாணக்கியன், ப.சத்தியலிங்கம், மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பம் மற்றும் கட்சி தீர்மானிக்கும் ஒருவரும்,
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் கூட்டணி தீர்மானிக்கும் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிவில் சமூகத்தின் சார்பில் மூத்த சட்டவாளர் குமாரவடிவேல் குருபரன் அழைக்கப்படவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட்டின் (Siri Walt)மத்தியஸ்தத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அனைத்து தமிழ்த்தரப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவது பற்றி கலந்துரையாடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
