கிளிநொச்சியில் கரிநாள் பேரணி- பெரும் திரளானோர் பங்கேற்பு
சிறிலங்காவின் 78 வது சுதந்திர நாளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர் தாயகத்தின் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்தின் ஒரு கட்டமாக கிளிநொச்சியில் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி, டிப்போ சந்தி வரை இடம்பெற்றது.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் கறுப்பு கொடிகளையும் பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது பெருமளவு சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கரிநாள் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி நகரில் இன்று வர்த்தக நிலையங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.




