மேலும்

மட்டக்களப்பில் கரிநாள் பேரணி- தடைகளை போட்டு குழப்பிய சிறிலங்கா காவல்துறை

சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,  கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இன்று கரிநாள் பேரணியை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு -கல்லடி பாலத்திலிருந்து  காந்தி பூங்கா வரையில் பேரணி செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான சிறிலங்கா காவல்துறையினர்  குவிக்கப்பட்டு காந்தி பூங்கா நோக்கிச் செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தினர்.

இதனால் பேரணியில் பங்குகொண்டவர்கள் ஆத்திரமடைந்து காவல்துறை அராஜகத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதையடுத்து, கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பேருந்து நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

கல்லடி பாலத்திலிருந்து தொடங்கிய பேரணி திருகோணமலை வீதியுடாக மட்டக்களப்பு நகர் நோக்கி சென்றபோது, வெள்ளைப்பாலம் அருகில் சிறிலங்கா காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தி,  புதுப்பாலம் ஊடாக  செல்லுமாறு பணித்தனர்.

இதனால் சிறிலங்கா காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனால் வெள்ளைப்பாலத்திற்கு அருகில் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு, அங்கேயே  அமர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் பிரகடனம் வாசிக்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *