கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் பாரிய பேரணி
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா – நெடுங்கேணியில் இன்று பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் நிலங்களை சூறையாடும் வகையிலும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இன்று முற்பகல் 10 மணிக்கு நெடுங்கேணி பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய பெரும் எண்ணிக்கையான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும், நெடுங்கேணி பிரதேச செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது நிலம் எமக்கு வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம், வேண்டாம் வேண்டாம் கிவுல் ஓயா திட்டம் வேண்டாம், வடக்கு கிழக்கை பிரித்தது ஜேவிபி போன்ற கோசங்களை எழுப்பினர்.
நெடுங்கேணி பிரதேச செயலகத்தை அடைந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளரைச் சந்தித்து சிறிலங்கா அதிபருக்கான மனு ஒன்றைக் கையளித்தனர்.
இதன் போது, இந்த திட்டத்தை நிறுத்துமாறு சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்துமாறும், இன்று நடத்தப்பட்டது ஒரு அடையாள அமைதி வழிப் போராட்டமே என்றும், கிவுல் ஓயா திட்டம் நிறுத்தப்படாவிட்டால், பெருமளவு மக்களைத் திரட்டி அமைதியற்ற முறையிலும் போராட்டத்தை நடத்த முடியும் என சிறிலங்கா அதிபருக்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, சிறீரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வன்னி மாவட்ட பொது அமைப்புகள் கலந்து கொண்டிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம், ரவிகரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சந்திரகுமார் உள்ளிட்டவர்களும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பிரதிநிதிகள், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.





