கட்டுநாயக்க விமான நிலைய தானியங்கி மின்-நுழைவாயில்களில் குழப்பம்- பயணிகள் அவதி
புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு மின்-நுழைவாயில்கள், கடவுச்சீட்டுகளை ஸ்கான் செய்யத் தவறியதால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் சிரமங்களுக்குள்ளானதுடன், தாமதங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், அமைக்கப்பட்ட இந்த உயர் தொழில்நுட்ப அமைப்பின் செயல்திறன் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மின்-நுழைவாயில்கள் தானாகவே பயணிகளை அடையாளம் காண அவசியமான மேம்பட்ட பயணிகள் தகவல் அமைப்பில், பயணிகளின் தகவல்கள் காணாமல் போனதால் இந்த சிக்கல் ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மின்-நுழைவாயில்கள் விமான எண்கள் மற்றும் பயணிகளின் விவரங்களை தானாக ஸ்கான் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அந்தந்த விமான நிறுவனங்களிலிருந்து முழுமையற்ற தரவு பரிமாற்றம் காரணமாக, பல பயணிகள், சோதனை சாவடிகளுக்கு திருப்பி விடப்பட்டனர்.
தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு வசதி சரியாகச் செயல்படுகிறது, ஆனால் விமான நிறுவனங்கள் சரியான நேரத்தில் பயணிகளின் தகவல்களை வழங்காததால்தான் சிக்கல் உள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத் தலைவர் ஜூட் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு உதவ ஒவ்வொரு மின்-நுழைவாயிலிலும் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர், இதுவரை, சிக்கல்கள் இருந்தபோதிலும் சுமார் 20,000 கடவுச்சீட்டுகள் இதன் மூலம், அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 28ஆம் திகதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்ட இந்த மின்-நுழைவாயில்கள் , எல்லைக் கட்டுப்பாட்டை நவீனமயமாக்குதல், பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் குடியேற்ற செயல்முறைகளை நெறிப்படுத்துதல் போன்ற பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா மற்றும் சைப்ரஸ் போன்ற நாடுகள் இதே போன்ற அமைப்புகளை முழுமையாக சீராக ஒருங்கிணைக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
