முன்னர் நிராகரித்தவரே கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரை -மீண்டும் இழுபறி
ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜெயரத்னவை கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில், புதிய கணக்காய்வாளர் நாயகத்தை அங்கீகரிப்பதை அரசியலமைப்பு பேரவை பிற்போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பு பேரவையின் சில உறுப்பினர்கள், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையை பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரியதால், இந்த தெரிவு பிற்போடப்பட்டுள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ளவரை ஆராய அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூடுதல் அவகாசம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு புதியதொரு பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்குத் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அரசியலமைப்பு பேரவை கூடி புதிய நியமனம் குறித்து தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் கால அவகாசம் கோரியுள்ளதால், அரசியலமைப்பு பேரவை அடுத்த வாரம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
