மேலும்

அனைத்துலக கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதில் இழுபறி

டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்க, நிதி திரட்டுவதற்கு அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்தும் சிறிலங்கா அரசின் திட்டம் தாமதமாகியுள்ளது.

இந்த கொடையாளர் மாநாட்டிற்கான நாள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2026 ஆம் ஆண்டில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புக்கு மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவை செலவிட சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.

இதில் 250 பில்லியன் ரூபா உள்கட்டமைப்புக்கும், 100 பில்லியன் ரூபா அழிந்த வீடுகளை மீளமைக்கவும், , 200 பில்லியன் ரூபா விவசாயம் மற்றும் பிற தொழில்களின் வணிக மீட்புக்கும் செலவிடப்படும்.

சிறிலங்காவை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியைத் திரட்டுவதற்கு, 2026 ஜனவரியில் அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, 2025 டிசம்பர் நடுப்பகுதியில், சிறிலங்காவின் பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த மாநாட்டிற்கான நாள் இறுதி செய்யப்படவில்லை. அதற்கான பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று  என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாத இறுதிக்குள் அனைத்துலக நாணய நிதியத்தின் மதிப்பீட்டிற்காக சிறிலங்கா அரசாங்கம் காத்திருப்பதாக மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

3 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிப்புற நிதி வசதியின் கீழ், சிறிலங்கா தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வை இறுதி செய்வதற்காக, அனைத்துலக நாணய நிதிய தூதுக்குழு ஏற்கனவே கொழும்பில் உள்ளது.

சிறிலங்காவின் திறைசேரியினால் பேரிடருக்கான நிதியை செலுத்த முடியாது என்று கூறி, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் டிசம்பர் மாதம் ஒரு உலகளாவிய நிதியுதவிக் கோரிக்கையை முன்வைத்தது.

அதேவேளை, உலக வங்கியின் விரைவான மதிப்பீடுகள்,  பேரிடரால் ஏற்பட்ட நேரடிச் சேதங்களின் மதிப்பு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கணித்துள்ளது.

இது 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும்.

இதனிடையே, சிறிலங்கா அரசாங்கம் விரைவாக  நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தை நிறுவி ஜனவரி 23 ஆம்  நாளுக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடைகளின் மூலம், 8.5 பில்லியனுக்கும் ( 28 மில்லியன் டொலர்) நிதியைத் திரட்டியுள்ளது.

இதில் 47 நாடுகளிலிருந்து  கிடைதத 9.49 மில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு பங்களிப்புகளும் அடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *