மேலும்

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் – மகாநாயக்க தேரர்கள் அனுரவுக்கு கடிதம்

கணக்காய்வாளர் நாயகம்  திணைக்களத்தின் மிகவும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை,  கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வலியுறுத்தி, மகாநாயக்க தேரர்கள்  கூட்டாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வெளியில் இருந்து கணக்காய்வாளர் நாயகம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதல்ல என்பதை வலியுறுத்தியும், கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் மிகவும் மூத்த அதிகாரியை இந்தப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தமானது என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறிலங்காவின் 41வது கணக்காய்வாளர் நாயகம், 2025  ஏப்ரல் 08ஆம் நாள்  ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ளது.

2025  ஏப்ரல் 09ஆம் நாள்  முதல்  2025  டிசம்பர் 05ஆம் நாள் வரை பதில் கடமைகளை நிறைவேற்ற தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டார்.

அவரது பணிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படாமல் இருப்பது,  கிட்டத்தட்ட 08 மாதங்களாக நிரந்தர கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியது, பொது நிதி மேற்பார்வை முகாமைத்துவம் குறித்து பல்வேறு தரப்பினரிடையே மாறுபட்ட கருத்துக்களுக்கு வழிவகுத்துள்ளது என்று மகாநாயக்க  தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பதவிக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட பலர், அந்தப் பதவியுடன் இணைக்கப்பட்ட விரிவான பொறுப்புகளை ஏற்கும் திறன் குறித்த கவலைகள் காரணமாக, நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என்பதையும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர்,  அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட தம்மசித்தி சிறி பக்கானந்த ஞானரதன தேரர் மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்ரீ மூர்த்தி  தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்த  கூட்டு கடிதம் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *