அமெரிக்காவின் தடைகளால் சிறிலங்கா முழு நன்மைகளையும் அடைய முடியாது
அமெரிக்கத் தடைகள் காரணமாக, ரஷ்யா-சிறிலங்கா இடையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முழு பொருளாதார நலன்களையும் அடைய முடியாது என்று, சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் லெவன் சகார்யன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த 30ஆம் திகதி பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த வட்டமேசை கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட அவர்,
அடுத்த மாதம் ரஷ்யாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையே நேரடி விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும்.
ஆனால் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு எதிராக விதித்த தடைகள் காரணமாக சிறிலங்காவில் மின்னணு பரிவர்த்தனைகள் சாத்தியமற்றதாக இருந்ததால், ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ரஷ்ய நாட்டினர் சீனாவில் ஒரு மாத விசா இல்லாத தங்குதலை அனுபவிக்கின்றனர்.
ரஷ்யாவிலிருந்து சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 200,000 க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் இங்கு வந்துள்ளனர்.
தடைகள் நீக்கப்பட்டால் ரஷ்யா-சிறிலங்கா வர்த்தகத்தில் மிகப்பெரிய இலாபங்கள் சாத்தியமாகும்.
ரஷ்யா-உக்ரைன் போர் முடிந்த பின்னரே இதைக் காண முடியும்.
தடைகள் நீக்குவது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ரஷ்ய தரப்பின் ஒரு முக்கிய நிபந்தனையாகும்.
எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், உக்ரைன் நேட்டோவின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது, ஒரு சுதந்திரமான, நடுநிலை நாடாக இருக்க வேண்டும்.
ஏனெனில் உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவிற்கு பெரும் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பை, அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்தேன்.
அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது சிறிலங்காவின் இறைமைக்குட்பட்ட விடயம்.
தடைகள் காரணமாக சிறிலங்கா பெரிய முதலீடுகளுக்கு ரஷ்யா செல்ல முடியாது. என்றும் அவர் மேலும் கூறினார்.
