புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்கு ஓராண்டு தேவைப்படும்
புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அதை விரைவிலேயே தொடங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2015-2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திருத்தத்தால் ஏற்பட்ட சட்ட சிக்கல் காரணமாக, மாகாண சபைத் தேர்தல்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க,
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான எல்லை நிர்ணயப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, தொடர்புடைய அறிக்கை சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
தற்போதைய சூழ்நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், தற்போதுள்ள சட்ட கட்டமைப்பின் கீழ் அந்த எல்லை நிர்ணய அறிக்கையின்படி அதை நடத்த முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இல்லையெனில், ஒரு புதிய எல்லை நிர்ணயம் தேவைப்படும், அல்லது பழைய முறையின்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு ஓராண்டு தேவைப்படும்.
எனவே, அரசாங்கம் அதனைச் செய்ய விரும்பினால், அந்த செயல்முறையை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
