ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆதாரங்களை மறைத்த பாதுகாப்பு தலைவர் மீது விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணையைத் தடுக்கும் வகையில், பல முக்கியமான ஆதாரங்களை மறைத்ததாக கண்டறியப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை தலைவர் ஒருவர் மீது விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஆதாரங்கள் மறைக்கப்பட்டது குறித்து சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீண்ட விசாரணைகளை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைகளில், சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஒருவர், ஆதாரங்களை மறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சாட்சியங்களை மாற்றுவதற்கு அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு உதவியதாகவும் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் இதுகுறித்த உண்மைகளை முறையிட்ட பின்னர், அவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைக்கப்பட உள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஒன்று அல்லது இரண்டு முன்னாள் படைத் தளபதிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவில் புலம்பெயர் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய போது சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.