மன்னாரில் சிறிலங்கா காவல்துறை அட்டூழியம்- பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல்
மன்னாரில் காற்றாலைகளுக்கான உதிரிப்பாகங்களை கொண்டு செல்வதற்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது, சிறிலங்கா காவல்துறையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மன்னாரில் காற்றாலைகளை அமைப்பதற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயற்படுத்தமாட்டோம் என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.
அந்த வாக்குறுதிக்கு மாறாக, காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு சிறிலங்கா அதிபர், உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, நேற்றிரவு காற்றாலை உதிரிப்பாகங்களை வாகனங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு 10 மணியளவில், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதனை மீறி உதிரிப்பாகங்கள் மன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டன.
நள்ளிரவு 12 மணியளவில் இரண்டாவது தொகுதி வாகனங்கள், காற்றாலை உதிரிபாகங்களுடன் வந்தபோது, பொதுமக்களும் கத்தோலிக்க மதகுருக்களும் வீதிகளில் இறங்கி தடுக்க முயன்றனர்.
அப்போது, சிறிலங்கா காவல்துறையினர் பெண்கள், மதகுருக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர்.
இதன்போது, பெண்களைக் கால்களால் மிதித்தும், தடிகளால் அடித்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் மன்னார் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு அதிரடிப்படையினர் ஆயுத முனையில், பொதுமக்களை அச்சுறுத்தி, காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்வதற்கு பாதுகாப்பு அளித்தனர்.