சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு மீண்டும் விளக்கமறியல்
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன உள்ளிட்ட சந்தேக நபர்களை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதிவான் உடும்பர தசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அளவ்வ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும், முன்னாள் கடற்படைப் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் சரத் மொஹொற்றி உள்ளிட்ட மேலும் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது பிணையில் உள்ள சந்தேக நபர்களும், சிறையில் உள்ள 10வது சந்தேக நபரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன மற்றும் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் சரத் மொஹொற்றி ஆகியோர் உடுதும்பர சிறைச்சாலையிலிருந்து மெய்நிகர் முறையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குற்றப் புலனாய்வுத் துறை, பிரதிவாதிகளின் சட்டவாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் சட்டவாளர் ஆகியோரின் வாதங்களை அடுத்து, வழக்கை ஒக்டோபர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிவான், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.