சொத்துக்களை வெளிப்படுத்தாத 41 பேரில் டக்ளஸ், பிள்ளையான், சுரேன் ராகவன்
டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சுரேன் ராகவன் உள்ளிட்ட 41 உயர்மட்ட பிரமுகர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமது சொத்துக்கள், பொறுப்புக்களைப் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பிக்காத 41 பேரில் ஒரு அமைச்சர், பல ஆளுநர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தூதுவர்கள், மூத்த இராஜதந்திர அதிகாரி, மற்றும் நீதிபதிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்தாதவர்களில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), சுரேன் ராகவன், காலம்சென்ற லொகான் ரத்வத்த ஆகியோர் அடங்குகின்றனர்.
சொத்துக்கள் பொறுப்புக்களை வெளிப்படுத்தாதவர்களில், முன்னாள் மாகாண ஆளுநர்களான, மார்ஷல் ஒவ் த பிளீட் ரொஷான் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க மற்றும் வில்லியம் கமகே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், பதினொரு தூதுவர்கள் உள்ளிட்ட குறைந்தது 28 மூத்த இராஜதந்திர அதிகாரிகளும், இரண்டு முன்னாள் நீதிபதிகளும், சொத்துக்களை பிரகடனம் செய்யவில்லை.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 80 இன் கீழ், அனைத்து பொது அதிகாரிகளும் பொதுப் பதவிகளில் இருப்பவர்களும் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அவ்வப்போது அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.