இன்றிரவு நியூயோர்க் பயணமாகிறார் அனுர- ஜப்பானுக்கும் செல்கிறார்
ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரி்ல் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
இன்றிரவு அவர் நியூயோர்க் நோக்கிப் பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள், அவர் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார். சிறிலங்கா அதிபரின் உரை, நியூயோர்க் நேரப்படி பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெறும்.
இந்தப் பயணத்தின் போது, ஐ.நா பொதுச்செயலர் அன்டனியோ குடெரெஸ், மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சிறிலங்கா அதிபர் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இதனையடுத்து அவர் வரும் 27ஆம் திகதி ஜப்பானுக்குப் புறப்பட்டுச் செல்வார். அங்கிருந்து 30ஆம் திகதி நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.