கட்டுநாயக்க விமான நிலையத்தை முடக்கிய சைபர் தாக்குதல்?
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி கணினி வலையமைப்பு இரண்டு மணி நேரம் செயலிழந்ததால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
நேற்று பிற்பகல் 1.15 மணிக்கு செயலிழந்த கணினிகள், பிற்பகல் 4.15 மணிக்குப் பின்னரே மீளச் செயற்பட ஆரம்பித்தன.
எல்லைக் கட்டுப்பாட்டு கணினி வலையமைப்பு செயற்படாததால், சாதாரண முறையில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உள்வரவு மற்றும் வெளிச்செல்லுகை நடைமுறைகளைக் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் பயணிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டதுடன், விமானப் போக்குவரத்துகளிலும் தாமதம் ஏற்பட்டது.
கணினி அமைப்பு செயலிழந்ததற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
“இது எங்கள் மீது மட்டுமல்ல, லண்டனின் ஹீத்ரோ உட்பட பல விமான நிலையங்களிலும் சைபர் தாக்குதல் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இது ஒரு சைபர் தாக்குதல் என்று நாங்கள் கடுமையாக சந்தேகிக்கிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, லண்டனின் ஹீத்ரோ, மற்றும் பிரஸ்ஸல்ஸ், பெர்லின், பிராண்டன்பர்க் உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்களும் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக ஐரோப்பாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான சேவை வழங்குநரான கொலின்ஸ் ஏரோஸ்பேஸை (Collins Aerospace) நிறுவனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.