6 அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க கோரி முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஆறு அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் ஆறு முக்கிய பிரமுகர்களின் சொத்துக்கள் குறித்து 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கமந்த துஷார, தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனது புகாரை ஏற்றுக்கொண்டதாகவும், சட்டவிரோத வழிகளில் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளை தொடங்கியதைப் போலவே, அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் தொடங்கும் என்று நம்புவதாகவும் கமந்த துஷார தெரிவித்துள்ளார்.
