கைது செய்யப்பட்ட லெப்.கேணல் இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தம்
பாதாள உலக குழுவைச் சேர்ந்த கொமாண்டோ சலிந்தவுக்கு ரி 56 ரக துப்பாக்கி ரவைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான, லெப். கேணல் தர அதிகாரியே, கொமாண்டோ சலிந்தவுக்கு 260 ரவைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டவுடன் இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்றும், பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புடைய இராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார் என்றும் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளுக்கு காவல்துறையினருக்கு இராணுவம் முழு ஒத்துழைப்பு வழக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொமாண்டோ சலிந்தவுக்கு, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் அதிகாரி ஆயிரத்திற்கும் அதிகமான ரவைகளை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை பாதாள உலக தலைவன் ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கு, அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பேருந்து மீது கிளைமோர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட தகவலும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
இதற்காக இரண்டு கிளைமோர்களை, தருமாறு கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம், கொமாண்டோ சலிந்த கேட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.