சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதங்களை கணக்கெடுக்க உத்தரவு
சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தொடர்பாக கணக்காய்வு செய்வதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலர் பாதாள உலக கும்பல்களுக்கு ஆயுதங்கள் வெடிபொருட்களை விநியோகித்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவ களஞ்சியசாலைகள், முகாம்களில் உள்ள ஆயுதங்கள் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு, காணாமல் போயுள்ள ஆயுதங்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றன.
ஆயுதங்களை கணக்கெடுக்கும் பணி ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் தொடர் இலக்கங்களை ஒப்பீடு செய்து, காணாமல் போயுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை மற்றும் வகைககளை கண்டறிவதற்கான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும், சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டு இராணுவ முகாமில் இருந்த 73, ரி 56 துப்பாக்கிகள் காணாமல் போயிருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.
அந்த ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களின் கைகளில் கிடைத்திருக்கலாம் என்றும்,இதனால் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
காணாமல் போன துப்பாக்கிகளில் 38 மீட்கப்பட்டுள்ளதாகவும், 35 இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாக 13 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.