36 நாடுகள் பங்கேற்கும் சிறிலங்கா கடற்படையின் காலி கலந்துரையாடல்
சிறிலங்கா கடற்படை நடத்தும் 12 வது, காலி கலந்துரையாடல் -சர்வதேச கடல்சார் மாநாடு வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில், வெலிசற கடற்படைத் தளத்தில் இடம்பெறவுள்ளது.
சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, காலி கலந்துரையாடல்- சர்வதேச கடல்சார் மாநாட்டின் 12வது பதிப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து சிறிலங்கா கடற்படை அறிவித்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு, கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமை தாங்கினார்.
கடல்சார் உறுதித்தன்மையை வளர்ப்பது, வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் சிக்கலான புவிசார் அரசியல் நிலப்பரப்பில் பயணிப்பது மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான கடல்களை உறுதி செய்வதற்கான, நாட்டின் உறுதியான அர்ப்பணிப்பு உள்ளிட்ட விடயங்கள் மாநாட்டில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும் என்று, கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்ரெம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இந்த மாநாடு வெலிசறவில் உள்ள வேவ் அண்ட் லேக் கடற்படை மண்டபத்தில் நடைபெறும்.
இந்த மாநாட்டில், இந்த ஆண்டிற்கான கருப்பொருள், ‘மாறிவரும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் பார்வை’ என்பதாகும்.
இதில், ஐந்து முக்கியமான விடயங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
கடல்சார் சுற்றுச்சூழல், கடல்சார் நிர்வாகம், கடல்சார் பொருளாதாரம், கடல்சார் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான இந்தியப் பெருங்கடலை வளர்ப்பது.
இந்த நிகழ்வில் 36 நாடுகள் மற்றும் 14க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த கடற்படைத் தளபதிகள் மற்றும் கடல்சார் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.