மேலும்

ஜெனிவா அமர்வில் முரண்படாத அணுகுமுறைக்கு சிறிலங்கா திட்டம்

சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் முரண்படாத அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் சர்வதேச உதவியுடன் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்கும், சிறிலங்கா உறுதியளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், பிரித்தானியா தலைமையிலான நாடுகளின் அனுரணைக் குழு, சிறிலங்கா தொடர்பான ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்ற , கடந்த கால பரிந்துரைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் மற்றும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்யும் விரிவான நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனுசரணை நாடுகள் குழு ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் அண்மையில் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்ட, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், சிறிலங்காவில்  பொறுப்புக்கூறலை மேம்படுத்த சர்வதேச சட்ட விருப்பங்களைப் பயன்படுத்துவதை பரிசீலிக்குமாறு  சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான ஒரு சூழலை உருவாக்கவும், இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல், புதிய நில அபகரிப்புகளை நிறுத்துதல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல், பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல், சர்வதேச நிபுணத்துவத்தை நாடுதல் மற்றும் அதன் நம்பகத்தன்மையை உருவாக்க கண்காணிப்பு உள்ளிட்ட பரிந்துரைகளையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு  தற்போது தயாராகி வருகிறது.

இதில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த முறை கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா அரசாங்கம் ஐ,நா மனித உரிமைகள் பேரவையின் செயல்முறைக்கு விரோதமாக இருக்காது என்றும்,  அது ஒரு சமரச அணுகுமுறையை மேற்கொள்ளும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அனுசரணை நாடுகள் கொண்டு வரும் புதிய பிரேரணைக்கு   சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்காது.

இருப்பினும், அது முரண்படுவதற்குப் பதிலாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட  முயற்சிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *