ரணிலை உடனடியாக விடுவிக்கக் கோருகிறார் எரிக் சொல்ஹெய்ம்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, சிறிலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்கக் கோரும் “சிறிலங்கா, தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன்” தானும் இணைவதாக எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
2022 பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் போது “சிறிலங்காவைக் காப்பாற்ற நின்ற” தலைவர் என, அவர் ரணில் விக்கிரமசிங்கவை விபரித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகளை “தகுதியற்றது” என்று சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், அவை ஐரோப்பாவில் எந்தவொரு குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கும் சமமாகாது என்றும் சொல்ஹெய்ட் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் அதேவேளையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தொடர்வதை விட “உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும்” அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
