சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 20 ஆண்டுகள் ஆகும்- சீன கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
சிறிலங்காவில், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை, ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் இந்தக் கருத்தை தம்மிடம் கூறியதாக, ஜே.வி.பி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், ரில்வின் சில்வா தலைமையிலான ஜே.வி.பி குழுவினர், சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தியிருந்தனர்.
இந்தப் பயணம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ரில்வின் சில்வா,
“ திட்டமிட்ட மாற்றங்களைச் செயற்படுத்த 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும். இன்னும் மூன்று முதல் நான்கு தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்குள் நாம் கற்பனை செய்யும் மாற்றங்களைச் செய்ய முடியாது.
சீனாவை மாற்றுவதற்கு அவர்களுக்கு, சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் நீண்ட கால நிர்வாகம், கட்சி மேம்பாடு மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.
நாங்கள் இனி ஒரு எதிர்க்கட்சியைப் போல செயற்பட முடியாது என்றும், நாம் இன்னும் திறமையாகவும் விரைவாகவும் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் பொருளாதாரம் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, அதற்கு எங்களுக்கு உதவுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்,” என்றும் ரில்வின் சில்வா மேலும் கூறியுள்ளார்.