சிறிலங்கா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்
தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு, ஒரு தலைவரை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு உத்தரவிடக் கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இளம் பத்திரிகையாளர்கள் அறக்கட்டளை (YJF) மற்றும் தயாட்டா சவியா அமைப்பைச் சேர்ந்த சிலோன் டுடே பத்திரிகையாளர் மிதுன் ஜயவர்தன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் , அதிபரின் செயலாளர், நாடாளுமன்ற சபாநாயகர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன பதவி விலகிய பின்னர், ஆறு மாதங்களாக இந்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவுக்கு ஒரு தலைவரை நியமிக்க அதிபருக்கு அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் இருந்தபோதிலும், நீதியரசர் அபேரத்ன வெளியேறியதிலிருந்து புதிய தலைவரையோ அல்லது ஒரு செயலாளரையோ நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் விளைவாக, தகவல் கோரிக்கைகள் தொடர்பான மேல்முறையீடுகளில் ஆணையத்தால் இறுதி முடிவுகளை வெளியிட முடியவில்லை, இது சட்ட மற்றும் நிர்வாக முட்டுக்கட்டையை உருவாக்குகிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகால வெற்றிடம் மக்களின் அடிப்படை உரிமைகளை, குறிப்பாக பொதுத் தகவல்களை அணுகும் உரிமையை மீறுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கும் தீர்ப்பையும், தாமதமின்றி அந்தப் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்குமாறு அதிபர் மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.