கிழக்கு கைதுகளின் இலக்கு என்ன?
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள், இனியபாரதி எனப்படும் கந்தசாமி புஷ்பகுமார் மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்த இரண்டு பேர், மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்த போதும், தற்போதுள்ள சட்டத்தை நீக்கிவிட்டு இன்னொரு சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியிருந்தார்.
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பது இதன் ஊடாக தெரியவந்திருந்தது.
இன்னொரு சட்டத்தின் ஊடாக, பயங்கரவாத செயற்பாடுகள் என தாம் கருதுகின்ற விடயங்களை, சட்டரீதியாக கையாளுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.
தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என, எல்லா தரப்புகளாலும் வலியுறுத்தப்படுகின்ற போதும், அரசாங்கம் அதனைவிட ஒரு படி குறைந்த இன்னொரு சட்டத்தை உருவாக்குவதற்கு முற்படுகிறது.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் கூட அவ்வாறான ஒரு முயற்சியை மேற்கொண்டது.
ரணில் அரசாங்கம் உருவாக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், கடும் எதிர்ப்புகள் காரணமாக கைவிடப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் உருவாக்குகின்ற சட்டமும் கூட, எந்தளவிற்கு மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் மதிப்பதாக இருக்கும் என்று நிச்சயமாக கூற முடியாது.
அதன் உள்ளடக்கம் எந்தளவுக்கு கொடூரமானதாக இருக்கும் என்று இப்போதே அனுமானிக்க முடியாது.
எவ்வாறாயினும், தமிழர் தரப்பும் சரி, மனித உரிமை ஆர்வலர்களும் சரி, தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடான இன்னொரு சட்டம் கொண்டு வரப்படக் கூடாது என்பதில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
ஆனால், அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு இணையான இன்னொரு சட்டம் தேவை என்பதை வலியுறுத்தும் வகையிலும் செயற்படுகிறது.
பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக, பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டதானது, ஒருவகையில் இந்த சட்டத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கான அணுகுமுறையாகவே கருதப்படக் கூடியது.
இப்பொழுது இனியபாரதி உள்ளிட்டவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்தச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருப்பதாலோ, தடுத்து வைக்கப்பட்டிருப்பதாலோ, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு விடும் என்றோ அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றோ அர்த்தம் இல்லை.
ஏனென்றால், 2009ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட , 12 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,794 பேர் கைது செய்யப்பட்ட போதும், அவர்களில் 184 பேருக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அவர்களில் 31 பேர் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர், 10 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் மீளப் பெறப்பட்டன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டவர்களில், 6.6 சதவீதமானவர்களுக்கு எதிராகவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதன் ஊடாக இரண்டு விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள் என்பது ஒன்று.
அவர்கள் மீது வீணான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தேவையின்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுகின்ற நடைமுறை இலங்கையில் இருக்கிறது என்ற உண்மை இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
வழக்குத்தாக்கல் செய்யக்கூடிய போதுமான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்படுகின்றவர்களே அதிகம் என்பது இன்னொன்று.
நிரூபிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டிருக்காமல் பெரும்பாலானோர் கண்மூடித்தனமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு நீண்ட காலத்துக்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஒரு நடைமுறைதான் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான விமர்சனங்களுக்கு அதிக காரணமாகும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டு, அதனை வைத்து வழக்குத்தொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வேறு சாட்சிகள், சான்றுகள் இல்லாமல் அதனை வைத்தே, அவர்களுக்கு எதிராக நீண்டகாலத்துக்கு வழக்கை நடத்துகின்ற சூழலும் இருக்கிறது.
இவ்வாறான சூழலினால் தான் பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
இதனைச் சுட்டிக்காட்டியே, இந்தச் சட்டம் அநீதியானது, நியாயமற்றது, அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறுவதாக உள்ளது என்ற விமர்சனங்கள் கூறப்பட்டு வருவதுடன், இதனை முற்று முழுதாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்கள் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், இதனை தக்க வைக்கும் நோக்குடன் பிள்ளையான், இனிய பாரதி போன்றவர்களின் கைதுகளை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறதா என்ற சந்தேகங்களும் உள்ளன.
2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கு பின்னர், கிழக்கில் பெருமளவிலான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் போன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.
இவை தவிர சட்டத்துக்கு புறம்பான வதை முகாம்கள் நடத்தப்பட்டவை, கப்பம் பெறப்பட்டமை போன்றனவும் இடம்பெற்றன.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் குறித்து அந்த காலகட்டத்தில் விசாரணை நடத்தப்படவில்லை.
ஏனென்றால், விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் தலைமையில் இயங்கிய குழுவினர், இராணுவ ஒத்துழைப்புடன் செயற்பட்டனர்.
இராணுவத்தின் துணை ஆயுத குழுவாகவே அவர்கள் இயங்கினர்.
அவர்களுக்கு தகவல் வழங்குவது, நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது போன்ற விடயங்களில் அவர்கள் ஈடுபட்டதால், இராணுவ பாதுகாப்பும் அரசாங்க பாதுகாப்பும் அவர்களுக்கு கிடைத்திருந்தது.
இதனால் அந்த காலகட்டங்களில் கிழக்கில் இடம்பெற்ற பெருமளவு படுகொலைகள் தொடர்பான எந்த விசாரணைகளும் இடம்பெற்றதில்லை.
வடக்கில் கூட 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பலர் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர், கருணா குழு என்ற பெயரில் எச்சரிக்கைப் பிரசுரங்கள் வீசப்பட்டன.
அந்த காலகட்டத்தில் நிலவிய பயங்கரமான சூழலில் அது பற்றிய நீதிமன்ற விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆனால் சுமார் 20 ஆண்டுக்குப் பின்னர், கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
பிள்ளையான், இனியபாரதி மற்றும் அவர்களின் சகாக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகள் எந்தளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வரும், குற்றமிழைத்தவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்களா என்பன போன்று முன் அனுமானங்களை யாரும் இப்போது செய்ய முடியாது.
ஏனென்றால், குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சாட்சியமளிக்க இன்றும் அச்சப்படுகின்ற மக்கள் இருக்கிறார்கள்.
அதைவிட விசாரணைகள் நியாயபூர்வமான முறையில் இடம்பெறுகின்றனவா என்ற கேள்விகளும் உள்ளன.
கைது செய்யப்பட்ட சம்பவங்களை மட்டும் வைத்துக் கொண்டு, கிழக்கில் நடந்த படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் போன்றவற்றுக்கு முற்று முழுதாக நியாயம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற நடவடிக்கை ஒன்று நடக்கிறது என்று கற்பனை செய்து விட முடியாது.
இந்தக் கைதுகளின் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கா அல்லது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இவர்களை தடுத்து வைத்து, அந்தச் சட்டத்தை நியாயப்படுத்துவதற்கா என்பதை உறுதி செய்யாமல், எந்தவொரு தீர்மானத்திற்கு வர முடியாது.
-கபில்
நன்றி- வீரகேசரி வாரவெளியீடு (13.07.2025)