மேலும்

5 வயதுச் சிறுமியின் எலும்புக்கூடு – சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் பாடசாலைப் பையுடன் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள், 4 தொடக்கம் 5 வயதுடைய சிறுமியுடையதாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரியின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு, நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,சட்ட மருத்துவ அதிகாரியின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நேற்றைய விசாரணைகளின் பின்னர் கருத்து வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன்,

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும்  21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

அது தொடர்பான சுருக்கமான விபரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மூன்று விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.

மனித புதைகுழியில், குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வழமையான சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக, இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ் 25 ,எஸ் 48 , எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களினது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது.

உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.

குறிப்பாக 4 தொடக்கம் 5  வயதுடைய  சிறுமியின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்.

சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கையை மன்று பரிசீலனைக்கு எடுத்தது.

குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *