அரச நிறுவனங்களில் முக்கிய சீர்திருத்தம் தேவை- தீபிகா உடகம எச்சரிக்கை.
சிறிலங்காவின் முக்கிய ஆணைக்குழுக்கள் மற்றும் திணைக்களங்களில் நீண்டகாலமாக நிலவும் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம, வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர், சிறிலங்காவின் நீதி மற்றும் நிர்வாக அமைப்புகளில், வலுவான தலைமைத்துவம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான தேவையை எடுத்துக் கூறியுள்ளார்.
காணாமல் ஆக்கப்படுதல், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஏனைய மீறல்கள் உள்ளிட்ட, மனித உரிமை மீறல்கள் குறித்த முறையான விசாரணைகள் இல்லாத நிலையில், இவற்றை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களாகக் கருத முடியாதும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காவல்துறை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற நிறுவனங்கள் திறம்பட செயற்பட்டால், அவற்றின் தோல்விகள் குறித்து பொது விவாதம் இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறுவனங்களை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அது அவற்றை வழிநடத்த யாரை நியமிக்கிறோம் என்பதிலிருந்து தொடங்குகிறது.
தலைமைத்துவம் மிக முக்கியமானது. பொறுப்பில் உள்ளவர்கள் சரியான அறிவு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டிருந்தால், குறைபாடுள்ள நிறுவனங்களைக் கூட மாற்ற முடியும் என்றும் தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் கட்டமைப்பில் தற்போது நிலவும் பலவீனம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
காவல்துறை மா அதிபர், மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் போன்ற முக்கியமான பதவிகளில் பதில் அதிகாரிகள் இருப்பது நிறுவன உறுதியற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது.
இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், சிறிலங்கா வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் பேராசிரியர் உடகம எச்சரித்துள்ளார்.