கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க இரகசிய முயற்சி
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார்மயமாக்க சிறிலங்கா அரசாங்கம் இரகசிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வகிக்க ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனத்தை நிறுவுவது தொடர்பாக,சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட,
கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வகிக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்குவது தனியார்மயமாக்கலுக்கான ஒரு மூலோபாய முதல் படியாகும்.
புதிதாக முன்மொழியப்பட்ட நிறுவனத்தின் பங்குகள் இறுதியில் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம்.
இது தனியார் – வெளிநாட்டு உரிமைக்கான கதவைத் திறக்கும்.
தற்போதைய அரசாங்கத்தின் அண்மைய தந்திரோபாயம், அரச சொத்துக்களை நிர்வகிக்க, நிறுவனங்களை உருவாக்கி, பின்னர் படிப்படியாக பங்குச் சந்தை மூலம் பங்குகளை விற்பதாகும்.
இது அதானி குழுமம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டைப் பெற அனுமதிக்கும்.
சிறிலங்கா துறைமுக அதிகாரசபை உண்மையிலேயே முனையத்தில் முழு உரிமைகளையும் பெற்றிருந்தால், ஏன் ஒரு புதிய நிறுவனத்தை நிறுவும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்?
2022 ஆம் ஆண்டு முன்னாள் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் தொடங்கப்பட்ட தனியார்மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை தற்போதைய நிர்வாகம் தொடர்கிறது.
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன கூட, ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தை தற்போதைய அதிபர், மிகவும் திறமையாக செயற்படுத்துகிறார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
கிழக்கு முனையம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், நாட்டின் 18 பொருளாதார மையங்களில் 14 ஐ தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.