நைஜீரியாவிடம் எண்ணெய் வாங்கும் சிறிலங்காவின் திட்டம் பிசுபிசுப்பு
நைஜீரியாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் வெற்றியளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த விலையில் பெட்ரோலிய பொருட்களைப் பெறுகின்ற முயற்சியாக, நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆபிரிக்க நாடுகளின் அதிகாரிகளுக்கு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், கடிதம் எழுதியது.
இருப்பினும், நைஜீரியா மசகு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வாங்குவதற்கு, நைஜீரிய உற்பத்தியாளர்களுடன் தொடர்புடைய வங்குநர்கள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் விளைவாக, தற்போது நைஜீரியாவில் இருந்து எண்ணெய் வாங்கும் திட்டம் முடங்கியுள்ளது.
அதேவேளை, இதுதொடர்பாக, சிறிலங்கா அனுப்பிய கடிதத்திற்கு தென் சூடான் பதிலளித்துள்ளது.
எரிபொருள் கொள்முதல் குறித்து பேச்சு நடத்த, தென்சூடான் அரசாங்கம் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை தமது நாட்டிற்கு வருகை தருமாறு அழைத்துள்ளது.
இருப்பினும், இந்தப் பயணம் குறித்து சிறிலங்கா அதிகாரிகளால் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.