வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் சிறிலங்கா அதிபர் செயலகம் முன் போராட்டம்
யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பகுதியில் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி, கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் அமைந்துள்ள, சிறிலங்கா அதிபர் செயலகம் முன்பாக இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்படாத பகுதிகளைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளை விடுவிக்க கோரும் பதாதைகளை ஏந்தியபடி பெரும் எண்ணிக்கையான ஆண்களும் பெண்களும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.