பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மாணவனுக்கு பிணை
சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 21 வயதுடைய மாணவன் முகமட் சுஹைலை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை முகமட் சுஹைல் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரைப் பிணையில் விடுவிக்கக் கோரும் சட்டமா அதிபரின் பரிந்துரையை தெஹிவளை காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுராத ஹேரத், நீதிவானிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து,, முகமட் சுஹைலை பிணையில் விடுவிக்குமாறு கல்கிசை நீதிவான் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
மாவனெல்லையை சேர்ந்த முகமட் சுஹைல், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தெஹிவளையில் உள்ள இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாததற்காகக் கைது செய்யப்பட்ட அவர், அதைச் சமர்ப்பித்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், இஸ்ரேலியக் கொடியை மிதிக்கும் இன்ஸ்டாகிராம் பதிவின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
9 மாதங்களாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதால் பிணை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடந்த வாரம் தெகிவளை காவல்நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.