நழுவ விடப்படும் பொறுப்பு
ஐ.நாவுக்கான நிதி ஒதுக்கீட்டை அமெரிக்கா வெட்டியதை அடுத்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முக்கியமான திட்டங்கள், முடங்குகின்ற சூழல் உருவாகியிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர், வெளியிட்டுள்ள அறிவிப்பு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ருவாண்டாவின் ஆதரவு பெற்ற, எம் 23 என்ற ஆயுதக்குழுவினர், கொங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள சில நகரங்களை கைப்பற்றிய போது, பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன.
அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கு, கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டம் அழைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், கொங்கோவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, உண்மை கண்டறிவதற்கான ஒரு குழுவை அனுப்புவதற்கும், விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய உண்மை கண்டறியும் குழு அங்கு சென்று போர்க்குற்றங்கள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அறிக்கை அளித்திருக்கின்ற போதும், விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் திட்டத்தை தாம், இடைநிறுத்தி வைத்திருப்பதாக வோல்கர் டர்க் அறிவித்திருக்கிறார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியே இதற்குக் காரணம்.
அமெரிக்காவில் தீர்மானத்தினால், இந்த ஆண்டு சுமார் 60 மில்லியன் டொலர் நிதி பங்களிப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.
கொங்கோ தொடர்பான, விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு சுமார் 3.9 மில்லியன் டொலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கான நிதி இல்லாத நிலையிலேயே, அந்த விசாரணையை, தொடங்குவதை கைவிடும் நிலை ஏற்பட்டிருப்பதாக வோல்கர் டர்க் கூறியிருக்கிறார்.
அதுபோல, வேறு பல திட்டங்களும் கூட, இடை நிறுத்தப்படும் அல்லது கைவிடப்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் பாதிப்பு இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டங்களிலும் எதிரொலிக்கக் கூடும்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்காக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் சாட்சியங்கள் சேகரிக்கும் பணியகம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதன் செலவுகளுக்கான போதிய நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நெருக்கடியை சந்தித்தது.
எனினும் பல்வேறு நாடுகளின் நிதி உதவியின் மூலம் அந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் அது தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா- இல்லையா? என்ற கேள்வி இருக்கிறது.
அமெரிக்கா உதவிகளை நிறுத்தியிருப்பதும் ஏனைய உதவிகள் குறைந்து போயிருப்பதும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை முடங்கச் செய்து விடக் கூடிய ஆபத்து உள்ளது.
இவ்வாறான சூழல் ஏற்பட்டால், இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, சாட்சியங்கள் சான்றுகளை சேகரிக்கும் பணியகமும் கூட நெருக்கடிகளை சந்திக்கலாம்.
ஆனால், அது ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட ஒரு திட்டம். முக்கியமான ஒரு பொறுப்புக்கூறல் திட்டம் என்ற வகையில், அது நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஆனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஊடாக, அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தயக்கம் காண்பிக்கின்ற போக்கு காணப்படலாம்.
செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும்.
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணை முடிவடைவதால், புதிய தீர்மானத்தின் ஊடாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கான நிதி வசதிகளை கொண்டிருக்கிறதா என்ற விடயம் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும்.
இந்த கட்டத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், தனது பங்களிப்புடன் அல்லது மேற்பார்வையுடன், சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான யோசனையை முன் வைப்பதில் இருந்து பின்வாங்க கூடும்.
உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாக, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வலியுறுத்தக் கூடும். அதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.
இதன் ஊடாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், தன் மீதான அழுத்தங்களை குறைப்பதற்கு முற்படக் கூடும் என்ற சந்தேகம் உள்ளது.
அவ்வாறான ஒரு யோசனையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் முன்வைக்குமானால், அது இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறை பின்னடைவுகளை எதிர்கொள்ளும்.
ஏனென்றால் அத்தகைய பொறிமுறையை பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில், உள்நாட்டு பொறிமுறை தோல்வியடையும்.
அதன் பின்னர், மீண்டும் சர்வதேச தலையீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச கண்காணிப்பு தேவை என வலியுறுத்துகின்ற போது, அவதானமாக இருக்க வேண்டும் என மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்த கருத்தை, இத்தகைய தருணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சர்வதேச கண்காணிப்புடன் புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணிக்க முடியாது.
ஏனென்றால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரே செம்மணியில் வைத்து, நிபுணத்துவம் வாய்ந்த தடயவியல் விசாரணைகள் சுயாதீனமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
ஆனால், சுயாதீனமான விசாரணைகளுக்கு இலங்கையில் இடமில்லை என்று, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
ராஜபக்சவினரை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும், அதில் புலனாய்வு பிரிவினர் தொடர்புபட்டிருந்தனர் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்தை அடிப்படையாக வைத்தே அவர் அதனை சுட்டிக்காட்டி இருந்தார்.
சுயாதீனமான முறையில் அரச கட்டமைப்புகள் இயங்கியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இதன்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதனால், உள்நாட்டு விசாரணைகள் நம்பகமானதாக இருக்கப் போவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஆனாலும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சர்வதேச தலையீடுகளுக்கு இடமில்லை என்றும் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் இப்போது நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
அது தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, தன்னிடம் உள்ள பொறுப்புக்களை நழுவ விட பார்க்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டு விசாரணை என்ற பெயரில், சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
பொறுப்புவாய்ந்த இரண்டு தரப்புக்களுமே பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களையும் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் புறக்கணிக்க முனைகின்றன.
அவர்கள் தங்களின் சுமையை இறக்கி வைக்கவே விரும்புகிறார்களே தவிர, நீண்ட காலமாக பாதிப்புக்களின் சுமைகளை தாங்கிக் கொண்டு வாழும் மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வதாக தெரியவில்லை.
-சுபத்ரா
நன்றி – வீரகேசரி வாரவெளியீடு (13.07.2025)