மீண்டும் அமெரிக்காவுக்கு செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்டக் குழு
சிறிலங்காவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள 30 வீத வரியைக் குறைப்பது குறித்து பேச்சுக்களை நடத்துவதற்காக இந்தக் குழு வொசிங்டனுக்குச் செல்லவுள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தில் கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்க நிர்வாகத்தின் அண்மைய கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் அவசர பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஓகஸ்ட் 1ஆம் திகதி இந்த வரி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், சிறிலங்காவின் முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய குழு அமெரிக்கா செல்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் இருப்பர்.
அமெரிக்காவின் வரி நிவாரணத்தைப் பெறுவதற்கான சாத்தியங்களை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு எதிராக 44வீத வரியை அறிவித்த பின்னர், இரண்டு முறை அமெரிக்காவுக்குச் சென்று சிறிலங்காவின் உயர்மட்டக் குழு பேச்சுக்களை நடத்தியிருந்தது.