அமெரிக்க வரி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச முடிவு
அமெரிக்கா விதித்துள்ள 30 வீத வரி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள 30வீத வரியால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவுள்ளதாக திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வரியின் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட வரி வருவாய் இலக்குகளை நாடு அடைய முடியாமல் போகலாம் என்றும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த சூழ்நிலையின் விளைவுகள் குறித்து கலந்துரையாட வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் சிறிலங்காவில் இருந்து அமெரிக்காவிற்கு, 3 பில்லியன் டொலருக்கும் அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அதேநேரத்தில் அமெரிக்காவில் இருந்து சிறிலங்காவுக்கு, 368.2 மில்லியன் டொலர் பொருட்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதன் விளைவாக 2.6 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறை காணப்படுகிறது.
இந்த நிலையில், சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆடைகளில், சுமார் 40 வீதம், அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுவதால், ஆடைத் துறைக்கு சலுகைகளைப் பெறுவது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த விரும்புவதாகவும் திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு எந்த திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை.