பேராயரின் கோரிக்கைப்படியே ஷானி, ரவி காவல்துறை சேவைக்கு அழைப்பு
ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளின் பேரிலேயே மீண்டும் சேவைக்கு அழைத்து வரப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் வேண்டுகோளின் பேரிலேயே, ஓய்வுபெற்ற இரண்டு காவல்துறை அதிகாரிகளான, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர், ரவி செனவிரத்ன மற்றும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்பார்வையிட மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.
முன்னாள் நிர்வாகங்களால் இந்த இரண்டு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், காவல்துறை தலைமையகம் ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக மீண்டும் நியமித்தது. அவர், 2021 ஜூனில் ஓய்வு பெற்றிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவரை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டதுடன், ஒப்பந்தத்தை நீடித்து பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமித்தது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு முன்னாள் மூத்த பிரதி காவல்துறைமா அதிபரான ரவி செனவிரத்னவை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்தார்.