உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- ரஷ்யா பேச்சு
சிறிலங்கா-ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசினார்.
இதன்போது சிறிலங்கா -ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய தளங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
பிறிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான சிறிலங்காவின் ஆர்வத்தை வரவேற்ற ரஷ்ய வெளியுறவு அமைச்சர், ரஷ்யாவின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் நீண்டகால நட்புறவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, அவுஸ்ரேலியா, தாய்லாந்து. தென்கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடளும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.