குவியும் இஸ்ரேலிய சுற்றுலாவிகள் – அறுகம்குடாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொத்துவில் மற்றும் அறுகம் குடாவில் உள்ள சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்வதற்காக பயன்படுத்தப்படும், ஊரணி பகுதியில், வழக்கமான சோதனைகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா இராணுவம், காவல்துறை மற்றும் கடற்படையினரால் தற்காலிக வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடுமையான பாதுகாப்புகளுக்கு மத்தியில், உள்ளூர்வாசிகள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு, இரகசிய நடவடிக்கைகளின் கீழ், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கியதாக, சந்திப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களில், மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பொத்துவில் மற்றும் அறுகம் குடா இடையேயான பகுதியில் மோப்ப நாய்களும் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இப்பகுதியில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் பணியில், சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள, குடியிருப்பு மற்றும் பிற பகுதிகளில் சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் நடமாட்டங்களைக்கண்காணிக்கின்றனர்.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம்குடாவில் அதிகளவில் குவிந்துள்ளதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.