சர்ச்சையை கிளப்பும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் சிறிலங்கா பயணம்
பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம், சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி தொடக்கம், 23ஆம் திகதி வரை சிறிலங்காவில் இராஜதந்திரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இந்தப் பயணத்துக்காக சிறப்பு விமானம், உலங்குவானூர்திகள், பிரத்தியேக உந்துருளி பாதுகாப்பு அணி போன்றவற்றை பயன்படுத்தவுள்ளார்.
சிறப்பு விமானத்தில் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி, சிவனொளிபாதமலை, சிகிரியா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு தனியான உலங்குவானூர்திகளையும் பயன்படுத்தவுள்ளார்.
இதற்கென உலங்குவானூர்திகளை அவர் சிறிலங்காவுக்கு கொண்டு செல்லவுள்ளார்.
அத்துடன் கொழும்பு நகரின் மிகவும் ஆடம்பரமான ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பார் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்களுக்குக் கூட வழங்கப்படாத சிறப்பு சொகுசு வசதிகள் இராணுவத் தளபதிக்கு வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.