ஓமந்தையில் விகாரைக்காக சிறிலங்கா காவல்துறை காணி அபகரிக்கத் தடை
வவுனியா- ஓமந்தையில் சிறிலங்கா காவல்துறையினர் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி ஒன்றை அடாத்தாக கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள தனியாரின் பயன்பாட்டில் இருந்த காணியில் தங்கியிருந்த சிறிலங்கா படையினர் வெளியேறிய பின்னர், அந்தக் காணியை சிறிலங்கா காவல்துறையினர் அபகரிக்க முயன்றனர்.
சிறிலங்கா படையினர் அங்கு தங்கியிருந்த போது சிறியளவில் அமைத்திருந்த பௌத்த வழிபாட்டு இடத்தை விகாரையாக கட்டியெழுப்ப சிறிலங்கா காவல்துறையினர் முற்பட்டனர்.
இதற்கு காணி உரிமையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் காணிக்குள் நுழைய சிறிலங்கா காவல்துறையினருக்கு தடை விதிக்கப்பட்ட போதும் அதனை மீறி துப்புரவுப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஓமந்தை காவல் நிலையத்தை ஒட்டியுள்ள நிலத்தை காவல்துறையினர் துப்புரவு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறை மா அதிபருக்கு இதனை அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
அதன்படி, குறித்த நிலத்தை துப்புரவு செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது, காவல்துறையினர் நிலத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அந்த காணி தனியார் காணியாக இருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த விவாதத்தில் உரையாற்றிய அவை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க,
மன்னார் விடத்தல்தீவில் உள்ள நிலத்தை வனப்பகுதியாக மீண்டும் அரசிதழில் வெளியிட அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இந்தப் பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்காக எடுக்கப்பட்டிருந்தது. அதை மீண்டும் வனப் பகுதியாக பிரகடனம் செய்யும் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை வவுனியா வடக்கில், 600 ஏக்கர் காடுகள் அகற்றப்படவில்லை என்றும், 40 ஏக்கர் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன உறுப்பினர் மீது மகாவலி அதிகாரசபை முன்னர் வழக்குப் பதிவு செய்தது என்றும், அரசாங்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.