ராகம, கந்தான, வத்தளையில் நேற்றிரவு சிறிலங்கா படைகள் பாரிய தேடுதல்
கம்பஹா மாவட்டத்தில் உள்ள ராகம, கந்தான, வத்தளை, ஜாஎல பிரதேசங்களில் நேற்றிரவு சிறிலங்கா படைகளும், காவல்துறையினரும் இணைந்து, பாரிய சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கைளின் போது, வீதிகளால் சென்ற அனைத்து வாகனங்களும், சோதனையிடப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த பிரதேசங்களில் காணப்பட்ட அனைவரும் சோதனையிடப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ராகம மற்றும் கந்தானவில் இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்தே குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நேற்றிரவு நடத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குற்றங்களுடன் தொடர்புடைய 300 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற தேடுதல்கள் நாடு முழுவதும் வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.