ட்ரம்பின் கடிதத்துக்காக காத்திருக்கும் சிறிலங்கா
பரஸ்பர வரிகள் தொடர்பான 12 கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கூறியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 44 சதவீத பரஸ்பர வரியை அறிவித்திருந்தார்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கியிருந்த 90 நாள்கள் கால அவகாசம், ஜூலை 9ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பதற்றமடைந்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் பரஸ்பர வரிகள் தொடர்பாக இரண்டு தடவைகள் வொசிங்டனுக்கு உயர்மட்டக் குழுக்களை அனுப்பி பேச்சுக்களை நடத்திய போதும், கூட்டறிக்கைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் எல்லா நாடுகளுடனும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாது என்பதால், குறைக்கப்பட்ட வரிகள் தொடர்பான கடிதங்கள் அந்தந்த நாடுகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் அனுப்பப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்திருந்தார்.
எனினும், நேற்று இதுகுறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப் 12 நாடுகளுக்கான கடிதங்களில் தாம் கையெழுத்திட்டதாகவும், திங்கட்கிழமை பெரும்பாலும் அவை அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
பரஸ்பர வரி விதிப்பு இடைநிறுத்தப்பட்ட காலக்கெடு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அமெரிக்க அதிபரின் கடிதத்துக்காக சிறிலங்கா அரசாங்கம் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.